வித்தியாச பூக்கள்
எழுத்துருவற்ற சட்டங்கள்
எதற்கிந்த திட்டங்கள்
அர்த்தமில்லை என்றறிந்தும்
ஓட்டைபோட்ட விட்டங்கள்!
அறிவுகள் ஆறுயென்று
ஆடை தரித்து
உயிர்களின் உணர்வுகற்கு
வேலி அடைத்து
மூளை மறைத்திருக்கும் மூடத்திறை!
குரங்கின்னும் பரிணமிக்க லட்சம் குறை!
ஆணானவன் பெண்ணை
பெண்ணானவள் ஆணை
எவனிட்டதிந்த ஆணை!
காதல் கண்ணற்றது
காதற்றது
வயது வர்ணமும் அற்றதென்று,
பால் மட்டும் கொண்ட
வித்தையென்ன?
மெத்தையில் புறள
சட்டமென்ன?
அடுத்தவீட்டு கட்டிலடி
கலவரங்கள் தேடுகிறீர்
தனிமனித உரிமைகளிள்
தீக் கரிகள் தூவுகின்றீர்
பாவம் அந்த பறவைகள்
சிறகு முளைத்தும்
கூண்டிடப்பட்டவை
வானம் பறக்க விடு
கபடற்ற காதலர்க்கு
சமூகச் சந்திக்கூடி
சாதாரணமாய் சிரிக்க விடு
காதல் என்பது
கனி மீதும் வரலாம்
காய் மீதும் வரலாம்
மீறிப் பூக் கூட தொடலாம்
முத்தங்களுக்கு முகவரிகள் உண்டா?
முழுநிலவு முகம் சுழிப்பதுண்டா?
சுகம் கேட்கும் குயில்கள்
சக சுகம் கேட்கும் மயில்கள்
தவறேதும் உண்டோ?
இல்லை துய்யளவும் இல்லை!
அவைகள் வித்தியாசங்கள்
விதிகள் இடிக்கப் பிறந்த இடிகள்
அகிலத்தின் அழகுகள்
காலக் கழுகின் அலகுகள்
ஏன் அவர்களின் சேர்க்கை மட்டும்
சேதாரமாக கண்ணில் படுகிறது?
அரசியலின் அம்மணம் தெரியவில்லை
அறியாமையின் அடர்த்தி தெரியவில்லை
பின் என்ன கேடு?
பறிக்க பல மலர்ந்தும்
வித்தியாச பூக்களையே
பறித்துத் துப்புகின்றீர்
நிறுத்திக்கொள்ளலாம்
போதும் பொசுங்கிய உறவுகள்!
இனி பெண் பெண்ணையும் தேடலாம்
ஆண் ஆணையும் தீண்டலாம்!
பார்க்க கூச்சமென்றால்
கண்களை மூடலாம்!
கேட்க எரிச்சலென்றால்
காதுகளால் நாணலாம்!
வாயைத் திறந்ததெதிர்த்தால்
இனி சட்டக்கணை பாயலாம்!
- அன்புநாதன் ஹஜன் -
Superb ♥️👌🏻
ReplyDeleteNext Level Hajan. Keep it up
ReplyDelete