ஒரு பரத்தையின் கருத்தரங்கு




வா பெண்ணே வா


வாலிபத்து விஷயங்களை

சேலையிட்டு மறைத்திருக்கும்

யவ்வன பெண்மணியே 

உன்னையும்

இந்த இரவையும்

ஒருமித்து வரவேற்கிறது

இந்த பெருமித்த அந்தப்புரம்!


வா பெண்ணே வா 


உலகத்தின் உன்னதமான தீர்மானம்

உன்னது!

கல்லடிகளை தாண்டி

சொல்லடிகளை தாண்டி

ஆடவர் கட்டமைத்த இந்த

அநியாய புவனம் ஆழ்வது

ஆடவர் மயக்கி சாசனம் எழுதுவிக்கும் வேசிகளே!


உனக்கொன்று சொல்லட்டா

பக்கத்து தேசத்து இளவரசிகளை விட

புள்ளிமான்களை விட

தோகை மயில்களை விட

ராணிகள் அதிகமாய் பொறாமைப்படுவது 

நம்மை கண்டுத் தான்!


அழகும் ஆடம்பரமும் 

ஆணவமும் அதிகாரமும்

ஒருங்கிணைந்து ஆசூயை கொள்ளும்

ராட்சஸ தேவதைகள் நாம்!


தகப்பனும் தமையனும்

தோள் கொடுப்பதாய் சொன்ன

தொன்னை நக்கி புருஷனும்

கை விட்டதால் தானே

தாசியர் சங்கமத்தில் சரண் புகுந்தாய்?


மன்னவரும் மந்திரியும்

மன்மத மாதவரும்

ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு

காலிடுக்கில் நா பதிக்கும் 

மாண்புமிகு சாமியரும் 

உன் அக்குளுக்கு அருகில்

அடைக்கலம் புகுவர்!


உன் உடலை

அடிமைப் பொருளாக்க 

ஆழ்மனதை அங்கீகரிக்காதே

தாபத்தால் ஆன உடலை

அட்ப

தாகத்தால் தவிக்கும் ஆடவரை

அடக்கி ஆட்சி செய்ய பணி!

இது

வாழ்க்கை உனக்களித்த 

ஆடம்பர கௌரவம்!


அவர் பொருள் ஈகிறார்

நீ உடல் தீர்கிறாய் 

அதுவா உன் சிறைப்பட்ட சித்தாந்தம்?


அட பைத்தியக்காரீ

உத்தமருக்கா உடல் கொடுக்கிறாய்?

உன்னையும் 

உன் அன்னையையும்

அந்தரங்க தோழியையும்

தாட்சண்யம் இல்லாமல்

வேசி மடத்திற்கு 

தாரை வார்த்த ஆடவருக்குத் தானே?


இத்தனை ஆண்டுகளில் ஆடவர் படைத்த

அத்தனை ஆயுதங்களை விடவும்

நீ கொண்ட பசைச் சந்தி 

நீ கொண்ட பெருமுலைகள் 

பெருஞ்சக்திக் கொண்டவைகள்!


வா ஒற்றுமையாய் பரிகாரம் தேடுவோம்!


சமயத்தில் நீ பட்டாம் பூச்சி

சமயத்தில் நீ கண்ணகி.


- ஹஜன் அன்புநாதன் -

Comments