நமக்கென பெருநகரம்





வா வா
அடுக்குமாடி சிறையின்
சுதந்திரமற்ற காற்றையே 
எத்தனை நாள் தான் சுவாசிப்பாய்

வா வா
வெளியே குதித்து விடு

இறுக்கமாய் கை பிடித்துக்கொள்
நகரத்தெருக்களின் ராத்திரி வண்ணங்கள்
உன் எண்ணங்களைப்போலவே 
சினன்னாப்பின்னமான அழகு

கடற்கரை முந்தி விரித்துக் காத்திருக்கிறது
திடல் அமர்ந்தவாறு எச்சில் துப்ப வா!

கண்ணீரில் மட்டுமல்ல
சுவாசத்திலும் உப்புப் பூக்கட்டும்
துருப்பிடிப்பதா நம் உடல்?

காலிடுக்கில் குடியமரும் 
தற்காலிக பூனைகளின் உடல் கோதலாம்
விழுதுவிட்டு காத்திருக்கும்
கற்கால மரங்களின் உடல் தீண்டலாம்

திரையரங்குகளின்
தீண்டப்படாத இருக்கைகளின் தாகத்தை
உதட்டெச்சில் கொட்டியே
தீர்த்து விட்டு போகலாம்

கோல்ஃபேஸ் றால் வடை கொறித்து
கொச்சிக்கடை வரை நடக்கலாம்
கொம்பனி தெரு நெய் தோசைத் துண்டுக்கு
கொட்டிக்காவத்தையிலிருந்தே நடைபவனி போகலாம்

அதே புத்தகங்கள்
அதே கக்டஸ் செடிகள்
அதே சோஃபா
அதே நெட்ஃபிளிக்ஸ் பொய்கள்
அதே புராணம்
மிஞ்சிப் போனால் நாகரீக காஃபி ஷாப்ஸ் 

சலிக்கவில்லையா?
சிரிப்பு வருகிறது!

ராத்திரி வேளைகளில் விழித்துக் கொள்ளும்
வர்த்தக நகரத்தின் கருவளையம் தெரியுமா?

வா வா
மேகங்களிடமிருந்து தப்பித்து
வாகனப்புகையில் சிக்கிக் கொள்ளும்
நான்காம் நாள் வளர்ப்பிறையை 
உன் கண்ணாடி கழற்றி வைத்து
ரெண்டு நிமிடங்களுக்கு உற்றுப்பார் 

மஞ்சள் விளக்குகளோடு 
ஓய்வெடுக்கும் புறக்கோட்டை
ராத்திரி புறாக்களுக்கு
பந்தி வைப்பது பார்திருக்கிறாயா?

ஒரு வசதியான போர்வை
உன்னை முழுமையாய் போர்த்திக்கொண்டு
அசதியான ஒரு அன்றாட வாழ்க்கையை
பரிசுபோல் தந்திருக்கிறது

சிறைப்பட்ட வசீகரம் நீ

சரி வா
அந்தி சாய்கிறது 
பெருநகரம் நெட்டி முறிக்கும் நேரம்

மரின்றைவ் பறவைகள்
கூடு திரும்பி குஞ்சுகளுக்கு எஞ்சிய
கொத்து ரொட்டிகளை பகிரும் நேரம்

வா வா
நடை முடிந்த பின்னர்
பாதங்களை மார்பிலேற்றி
காலழுத்தி விடுகிறேன்!

- ஹஜன் அன்புநாதன் -



Comments