கபிலவஸ்து ரோஜாக்கள்
கண்மணி
மென்விரல் மீண்டும் பிடிக்கக்
காலம் இனி இல்லையென்று
கண்ணீர் தேற்றி
காலாறும் நேரமிது
தொத்திக் கொண்டாடும்
மழைத் திவலையின் சலனம்
இதயத்துடிப்பை
இரட்டிப்பாக்கும் போது
என்னருகில் நீ இல்லை.
ஞான மேடையில் அமர்ந்து
விழி மூடி நீ
ஆதியந்தம் தேடயிலே
பாதங்களில் வந்து விழும்
அத்தனை
போதி மர இலைகளிலும்
நான் விட்ட கண்ணீரின்
கரிப்புத் தன்மை படிந்திருக்கும்!
கௌத்தமா
பூனைப்பாதம் பொருத்தி நீ
எனை நீங்கி ஒடையிலே
சயனத்திலோ,
குழந்தை வெளித்தள்ள
யோனி கிழித்த வலியினிலோ
புரண்டு
படுத்திருந்தேனெனவா எண்ணினாய்?
இதயம் கிழிந்த வலியோடும்
சதா காலத்திற்கும் தொலையப்போகும்
சாசுவத சயணத்தொடும்
அக்கப்போரடித்தவண்ணம்
பாதச்சந்தம் கேட்க
விழித்துக் கொண்டிருந்தேன்
எனக்கும் உனக்கும்
ஆறுதல் தேடி
அழுது கொண்டிருந்தேன்!
விம்மிப்பொறுகி ஓலமிட்டால்
திரும்பி விடும் – உன்
தணிந்த கழல் பாதமென்ற
நப்பாசையும்
ஏகாந்தம் மீது நீ பூண்ட
உறவுக்கிடையில்
சக்களத்தியெனக் குறுக்கிடத் தவிக்கும்
காதலெனும்
தப்பாசையும் ஒன்றிணைய,
உயிரையும் உடலையும்
வேறுபடுத்திக் கிழித்து
உச்சஸ்தாயி மௌனத்தில்
கத்திக் கொண்டிருந்தேன்!
விடியலுக்கு முன்னே
பாலுக்குக் கண்
விழிக்கும் குழந்தையை
மார்புக்குக் கிடத்தி
உன் தகப்பனிவனென்று
நிகர் நிறைவானதொரு
புன்னகையை அளபெடுத்து,
பாலோடு
சேர்த்து ஊட்டையிலே
புன்னகையில் புதைந்த உன்னை
அவன்
ஆவாகிக்காது போயிருந்தால்
நான்
அனாதை!
நீயணைக்காச் சுகம்
குழந்தைக்கும் தெரிந்ததால்
சீம்பால் தட்டிக்களித்த அவன்
மார்புக்கு மத்தியில் புதைந்து
கத்திக் கொண்டே இருக்கப்
பால் கட்டிப் போன
கனத்த என் முலைகள்
உன் கை படக்
காத்திருந்து கசிகிறது.
மாளிகை பிரிந்து
மடி படுத்த இதம் துறந்து
கட்டிக்கிடந்த கதகதப்பறுத்து
முத்தங்களை
முற்றுப்புள்ளிக்கு வேடமுடுத்தி
அரச மரத்தின்
நிழல் நீ நாடிச் செல்ல
நம் மகனுக்கு முதல் பல் முளைக்கிறது.
சடுதியாய் விரியும்
பேரண்டம் அது போல
நமக்குள் வேர்விடும்
உறவுப் பிளவை
ஒன்றிணைக்கும் நோக்கம்
என்னை
சொப்பனத்து நேரத்தில்
நெசவுக்கு நேர்த்தையிலே
ஊசிக்குக் கோர்த்த
சணலைத்தும் ஒன்றாய்
சொல்லிவைத்தது போல
அறுந்து விழுகிறது.
துறவு
நீ மட்டும் பூண்டதா?
உணவுத் தள்ளிவைத்து
உல்லாசம் கொள்ளிவைத்து
சௌந்தரியம் மாண்டு
சர்வம் விளக்கி
நடைப் பிணம் நானாகிப்
பூண்டேன் துறவற பித்து
பருவங்கள் பல மாய்கிறது
தலைக்கு நான் மல்லி வைத்து!
சீலனே!
எக்கச்சக்க பௌர்ணமிகள்
வெள்ளம்- வறட்சி
முதல் நரை
கன்னத் தொப்பை
உன்னிலும் கொஞ்சக் குறைய –
தத்துவம்
இத்தனையும் நான் கண்டு
ஏழாண்டுகள்
நீ ஞானம் காண்பதற்கும்
நான் உன்னைக் காண்பதற்கும்
ஏழாண்டுகள்
ஆசையும் அழுகையும்
ஆட்கொண்ட பார்வையில்
மெல்லத்திறந்தவுன்
கண்கள் நேர் பார்த்து
நடந்தது நான் பேசத்
தூரத்துச் சொந்தம் போல்
அளந்தே நீ பேசும் வார்த்தைகள்
தொத்திக் கொண்டாடிய
மொத்தக் காதலையும்
கழுவுக்குக் கிடத்த
அனைத்தையும் இழந்தேன்.
கண்மணி
மென்விரல் மீண்டும் பிடிக்கக்
காலம் இனி இல்லையென்று
கண்ணீர் தேற்றி
காலாறும் நேரமிது
தாமரைக்கண்ணே!
கபிலவஸ்து ரோஜாக்கள்
அபினி சுரக்கும் இந்த நேரத்தில்
காமம் வெளிறிய என்னை
அருகாமையில் அடை வை!
-ஹஜன் அன்புநாதன்-

Comments
Post a Comment
கருத்து சொல்டு போங்க