ராத்திரி ஓலமிட்டப்போது
ஒரு வேசி படிக்கட்டின் மேலிருந்து
ரெட்டை விரல் காட்டியழைத்தாள்
முகமூடி அணிந்திருந்த அவள் முகம்
கருத்திருந்தது
எதுமறைக்க முகம் மறைத்தாளென அறியேன்
மெளிந்த உடல் - புடைத்த நாளங்கள்
அலங்கோலமாய் கந்தல்
நாப்பது தாண்டிய நரை
கையிலொரு பிளாஸ்டிக் பை!
ரெட்டை விரல் குறிப்பு?
ரெண்டாயிரந்தான் வந்து படு என்று
அர்த்தம் கொண்டு நடக்கப் பார்த்தேன்
அவள் கண்கள் சிவந்திருந்தன
யார் மீதான கோவம்?
அல்லது கஞ்சாவா?
இல்லை
ரெட்டைக் கொட்டை இருக்கிறதா
பரத்தையின் மகனே என்று தான் கேட்டாளா?
அவள் அலங்கோல உடலுக்கு
ரெண்டாயிரந்தான் அடுக்குமா?
ராத்திரி முழுக்க நின்றாலும்
ரெண்டாயிரந்தான் தேருமா?
ஆணுறைக்கு நானூறு போக
கருத்தடை வில்லைக்கு எண்ணூறு போக
எண்ணூறு தான் விஞ்சுமா அவளுக்கு?
இல்லை படுத்த இடத்துக்கு அதிலும் பாதியா?
சாப்பிட்டிருப்பாளா?
சப்பச் சொல்லி அடிவாங்கி இருப்பாளா?
அழுதிருப்பாளா?
திருப்பிதான் அடித்திருப்பாளா?
எப்படியும்
இன்றோ நாளையோ போய்விடுவாள் போலிருக்கும் அவள்
இந்த ஒற்றைத் தரமேனும்
எவனிடமும் அடிவாங்காமல் ராத்திரி கழிந்தால் சரி!
தொடர்ந்தும் நடக்க
தலையின் மேல் பெருமரம் சுமந்த பூவொன்று
தோப்பென விழுகிறது
நேரங்கெட்ட நேரத்தில்
ச்செய்
உதிரத்தானே சனியன் பூத்துத் தொலைக்கிறது!
- ஹஜன் அன்புநாதன் -

🫡
ReplyDelete