மகற்காற்று நன்றி





ஐய்யா

மூத்த சோதரனே

நெஞ்சு முடி மெத்தையாக்கி 

தூங்க வைத்த தேவதையே 

அப்பனே எந்தையே

எனை பெற்றடுத்தப் பேரருளே!


நீங்கள் எனை ஈன்றெடுத்த போது

எந்த வயதில் இருந்தீரோ

அந்த வயதின் அருகாமையை

அண்மித்துக் கொண்டிருக்கின்றேன்

இப்போது நான்!


ஏகாந்த பொழுதுகளில்

எதனையும் விட அதிகமாய் நேசிப்பது

உங்கள் நெஞ்சுக்குள் சுருண்டு

வெப்பத்தில் உறங்கும் போது

அள்ளி அரவணைத்து முத்தமிட்ட

நரை விழாத முடியோடு சதை தளராத உங்கள்

யவ்வன பிம்பங்களை!


...


அப்பா

என் முதல் எதிரி நீங்கள்!


எந்தப்பொழுதிலும் தாய் - முத்தத்தொடே

புலங்கும் போது

தூரமிருந்தவாறே தூக்க முனைவீர்கள்


கைகளே ஆயுதமாய்

கண்டிக்க விரைந்த போதும்,

தவறுகள் நேர்ந்த நொடி

அறிவுறுத்தி கழுத்தறுக்கும் போதும்,

பொருளாதார விலங்கு 

உங்கள் சதைகளை குதறும் போது

விண்ணப்பித்த விளையாட்டு பொருள்

விளக்கி வைத்து நீங்கள் நடந்த போதும்


அப்பா

என் முதல் எதிரி நீங்கள்!


அந்த கண்டனப்பொழுதுகளின் பின்னர்

ஆரத்தழுவி எனை அரவணைத்து 

தலை தடவி விட்ட போது,

குழறி இடறிய 

உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளின் பின்னும்

மறைந்து நின்ற அந்த கண்ணீர் துளிகள்

இப்போது என் இருதயத்தில் 

எண்ணற்ற கருணை பாய்ச்சுகின்றன


...


நீங்கள் மேற்கத்தேய கல்லூரிகளில்

கல்வி பெறவில்லை

புதுப்புத்தகமோ மத்த சௌகரியமோ கொண்டு

பள்ளி செல்லவில்லை


நீங்கள் படித்ததெல்லாம்

கங்காணி வேலைக்குத் தகுதி பெற

தக்கதோர் சிறுபடிப்பு 


தன் பெயரோடு 

மற்றவர் பெயரும் சேர்த்தெழுத வோர்

குறும்படிப்பு


ஆனால் நீங்கள்

முகாமைத்துவம் தொடர்பில்

முக்கி முக்கி எழுதப்பட்ட

எந்தவொரு நூலையும் 

ஏரெடுத்தும் பார்க்காமல்


முதிர்ந்த ஞானத்தோடு

இந்த 

உலகினை ஆழும் மாயம்

இன்றைக்கும் எனக்கு

அத்துணை புதிர்

அத்துணை புதிர்!


கணக்கா - கவிதையா - கட்டுரை விஞ்ஞானமா

எல்லாம் தெரியும் உங்களுக்கு!


அப்பா 

உங்களிடம் இருந்து தானே

இளையராஜாவே முதல் முதலில் கற்றேன்!


...


நியாபகம் இருக்கிறது ஐய்யா


கிழிந்த காற்சட்டை

ரேசன் பாண் 

தூங்க கோணி சாக்கு

அப்பன் உதை

காசில்லாமல் உங்கள் நிலை


நியாபாகம் இருக்கிறது ஐய்யா 

நீங்களுங்கள் சிறுவயதை 

எங்களோடு பகிர்ந்தது!


இன்றுவரை நாங்கள்

கிழிந்த காட்சட்டைகளை 

அருகில் அனுமதிப்பது கூட இல்லை,

ஒற்றை வேளையேனும் 

பசியென்று படுத்ததில்லை,

வெளிநாட்டு கம்பளி போர்த்தாமல்

இரவொன்றும் கடந்ததில்லை

இன்றுவரை நீங்கள் 

அநாகரீகமாக இடையூறு செய்ததில்லை


அப்பா 

நீங்கள் என் முதல் காதலி!


...


அப்பா 

நீங்கள் என் சாகச வீரன்!


கையில் காசில்லாமல் 

நாளையென்ற நினைப்பில்லாமல்

பொருளாதாரம் பொருட்படுத்தாமல்

என் நாளைக்காக 

முள்ளின் மேல் நடக்க நேரிடுமென்று அறிந்தும்

மாற்றுக்கருத்தில்லாமலன்றோ

றோயலில் சேர்த்தீர்கள்!


அன்றதன் 

அருமை தெரியவில்லை

இன்று 

ஒவ்வொரு முறை கல்லூரி கடக்கும் போதும்

எப்படி என் அப்பன்

இப்படி ஒரு சாகசத்தை சாதாரணமாய் செய்தான்

என்பது

என் சென்மம் முடியும் வரை நீளப்போகும் 

ஒரு அதிசயச் கேள்விக்குறியாகிப்போன

ஒரு சாகசச் செயலாகத் தெரிகிறது!


நான் ரோயலில் படித்தது

உங்களுக்கு கௌரவம்

தேயிலை பறிக்கும் எனக்கு பிறந்த

என் செல்ல மகன்

நாடாளும் மக்கள் படிக்கும்

நல்லிடத்தில் படிக்கிறான் என்பது

உங்களுக்கு கௌரவம்!


எனக்கோ வறட்டு கௌரவம் 

ரோயலில் சேர்த்து விட்டு

என்னப்பன் 

தேயிலை பறிக்கிறான் என்பது

எனக்கு வறட்டு கௌரவம்!


ஐய்யா நான் சிறுபுத்திக் காரன்

நீங்கள் தேவதை!


அப்பா

இன்றும் என் நினைவில் 

பசுமரத்தாணிபோல் பதிந்தே இருக்கிறது


பெற்றோர் கூட்டங்களுக்கு

மத்திய மலைநாட்டிலிருந்து

உங்கள் வேலை கெடுத்து

கொழும்பு வந்து போவீர்கள்


உங்களுக்கு சிரமமாய் போனதொரு காரியம்

பாடசாலைக்கு ஒரு நாள் கூத்தாய் அமைந்தது

இன்றுவரை என்னை

உலகம் வெறுக்க செய்கிறது


எத்தனை துன்பங்கள் 

என்னால் அனுபவித்தீர்கள்

எண்ணி எண்ணி எழுத்துறுவாக்கும் போது

விம்மி விம்மி அழுகை விழுகிறது


அப்பா

நீங்கள் என் சாகச வீரன்!


...



நீங்கள் ஆசைப்பட்டதெல்லாம்


என் கழுத்தலங்கரிக்கும் செதஸ்கோப்

தம்பியின் தலையில் என்ஜினியர் தொப்பி


ஆனால்

நாங்கள் இருவரும் 

வெவ்வேறு திசைகளில் 

பயணித்துக் கொண்டிருக்கின்றோம்


என் கையில் பேனை

அவன் கையில் என்னவென்று 

இதுவரை எனக்குத் தெரியாது


உங்கள் நிராசையின் வருத்தம் புரிகிறது


இன்றுவரை வார்த்தைகளால் கூட 

இது பற்றி பேசவில்லை நீங்கள்

அதிகாமாய் உங்களை நேசிப்பதில்

அதுவும் ஒரு காரணம்


உங்கள் நிராசையின் வருத்தம் புரிகிறது


நான் உங்கள் முன் நானாய் இருப்பதே

உங்களுக்கான மகத்தான வெற்றி!


எனை பிரசவித்த இந்திரிய மூலத்திற்காய்

என் பேனை முதல் முதலாய் இந்திரியம் சிந்துகின்றது!


இது வரையென் 

எண்ண ஓட்டங்களுக்கு

சற்றே வேலியடித்து எழுதிய கவிகளை விட

இந்த கவிதையே

என் மரபுக்கு

வண்ணமடித்து சிரிக்கிறது!


...



பெருமூச்சிழுத்து விடுங்கள்

உங்கள் தோள்களை

என் தோட்பட்டைக்கு 

கன்னியா தானம் செய்யுங்கள்


உங்கள் சுமை 

இனி தூரத்து சொந்தக்காரனாய் 

தொலைந்து போகட்டும்


உங்களுக்கென கொஞ்சம்

வாழ்ந்து விட்டு உலகு நீங்குங்கள்


சிரியுங்கள்

சுமையற்ற உலகணுபவியுங்கள்


தொலைகாட்சி பாருங்கள்

ஊர் சுற்றுங்கள்

நாத்திகனின்

தந்தையென்ற

பெருமிதத்தோடு

நாயன்மார் வழிபாடு செய்யுங்கள்


ஐய்யா

அப்பா


உங்கள் சுண்டுவிரலை இறுகப்பிடித்தவாரு

எங்கேனும் ஒரு முறை - எனை

கவனமாய் கூட்டிச் செல்லுங்கள்


என்ன வேண்டும் என கேட்டு

கேட்பதை வாங்கி கையில் கொடுங்கள்


அவ்வப்போது ஆசையாய் கொஞ்சுங்கள்


நெஞ்சு முடி மெத்தையாக்கி 

மீண்டுமொருமுறை

தூங்க வைத்து தூங்குங்கள்


முழு விவரத்தோடு ஒரு முறை

உங்களை இழுத்து

அணைத்தவாறு 

வியர்த்தேக் கழியவேண்டும்

இந்த கருணையற்ற இரவு!



- அன்புநாதன் ஹஜன் -




Comments