மௌனத்தில் புதைந்த கவிதை


புத்தக சாலையின்
பூச்செடிக்கருகே
இரண்டு பெருமலர்கள்
பூத்திருக்கக் கண்டேன் 

ஒன்று பாரசீக ரோஜா
ஒன்று நீங்கள்
 
ரோஜா...
இலைகளுக்கிடையில் மறைந்திருந்தது
நீங்கள்…
ஹிஜாபிற்கிடையில் ஒளிந்திருந்தீர்கள்

உங்கள் வாகு
புரியாத மௌனம்
கள்ள விழிகள்
கையில் புத்தகம்
இருதயமும் மேற்தோலும்
ஒரு சேர வலியில் துடித்தது!
 
ஸரீனா!
  
நினைவிருக்கிறதா உங்களுக்கு?
ஒழிந்து நான் பார்த்துக் கொண்டிருக்க
ஏதோ பற்றிக் கேட்டீர்கள்
புரியாமல் தவித்த போது
கண்களால் புத்தகம் காட்டி
எங்கிருந்து எடுத்தீர்கள் என்றீர்கள்
தொண்டை நெளிந்து திணறிய போது
சிரித்து விட்டுக் கடந்தீர்கள்
 
நினைவிருக்கிறதா
அன்றிலிருந்து நீங்கள் – என்
அத்தியாவசியம்!

உங்கள் நீண்ட விரல்கள்
சத்தமற்றச் சிரிப்பு
மைய்யிட்டக் கண்கள்
காய்ந்த உதடு
முகப்பருக்களின் களஞ்சியமாய்
எப்போதும் சிவந்த கன்னம்

உங்கள் அருகிலிருந்த போதெல்லாம்
திருட்டுத் தனமாய் ரசிப்பேன்
இரவுக்கு முந்திய பொழுதுகளில்
நாட்குறிப்பில் திருஷ்ட்டிக் கழிப்பேன்

அத்தனை அழகு நீங்கள்
அத்தனை அழகு நீங்கள்!

நன்றாகத் தெரியும் எனக்கு
பேசும் போதிலெல்லாம்
உங்கள் கண்கள் பார்த்துக் கதைப்பது
உங்களுக்கும் பிடிக்கும்
ஆகையினால் கதையளப்பது 
அத்தனைக்கு எனக்குப் பிடிக்கும்

ஸரீனா!
 
காமம் கலைந்த மோகம் இது 

நீங்கள் அடிக்கடி உடுத்தும்
மேற்கைத்தேய ஆடைகளை
அச்சமின்றி கலைந்துவிட்டு
சேலை உடுத்தி ரசிப்பதால்
என் கற்பனைகளுக்கு நான்
கட்டியங்கூறுவேன்

ஸரீனா!
காமம் கலைந்த மோகம் இது

அடக்குமுறை பேசிவிட்டு
பெண்ணியம் கதைத்து விட்டு
கண் துடைத்துக் கொண்டு
தொழுகைக்கு விரையும் நீங்கள்
குழந்தையின் முழு வடிவம்
 
வலிகளை கிடத்தி விட்டு
பயங்களை பகிர்ந்து கொள்ள
பக்குவமாய் நெறிப்படுத்தும்
அழகிய அழகே நீங்கள்
தாய்மையின் மறு வடிவம்
 
ஸரீனா!
 
என் பெண்மையின் நுழைவாயில் நீங்கள்
என் சோகம் கேட்டு நீங்கள்
தலையாட்டும் போதிலெல்லாம்
சோகங்களெல்லாம் சொர்கங்கள் ஆன போது
தாபங்கள் எனக்குத் தாய்க்குடம்
 
கைகளால் வாய் மறைத்து
நாகரீகமாய் நீங்கள் அசைப்போடும் போது
அமிலம் சுரந்தே – என்
நெஞ்சுக்கு வயிற்றெரிச்சல்
 
ரெண்டே முறை 
நீங்கள் ஹிஜாப் கலைந்து
பார்த்ததுண்டு
அப்போதே அடித்தது நெஞ்சில் 
கார்கூந்தல் மின்னலொன்று
 
அற்றை நொடி
உங்கள் நம்பகம் வென்ற ஆண்மை
அலாதி வாசமடித்தது
 
ஸரீனா!
அழகியலின் அகங்காரம் நீங்கள்!
 
நான் சொல்வேன் என நீங்கள்
நீங்கள் கேட்பீர்களென நான்
நம் இருவரின் முட்டாள் தனங்களுக்கு
பலியாகிப்போன காலம்

ஸரீனா!
உங்களை மௌனமாய் காதலித்த – என்
என் சின்னக் குழந்தைக்கு
வாய் மழலைக்கு முந்தியது
ஆற்றல் தவழ்ச்சிக்கும் முந்தியது

எத்தனை நாள் இருப்பீர்கள் 
என்னோடு இன்னும்?
தற்செயலாய் தீண்டும் உங்கள்
தார்மீக விரல்கள்
எத்தனை நாள் சிண்டு 
தீண்டுமென்னை மீண்டும்?
 
வாசலில் காத்திருக்கிறது
கலியாண நிர்பந்தம்!
ஊமை கண்ணீரால் விடை கொடுக்கிறேன்
உங்கள் கலியாண வாழ்க்கை 
பூத்துக்குழுங்கட்டும்!


- ஹஜன் அன்புநாதன் -

Comments

Post a Comment

கருத்து சொல்டு போங்க