முரண்பட்ட முறுவல்
ஒரு கோழியின் சிறகு தந்து
சூரியன் பிடிக்கச் சொன்னது
முக்கினேன் பறந்தேன்
தொப்பென விழுந்தேன்
சதை கழித்தேன்
முடி மழித்தேன்
தொடையில் ஒரு துண்டு
பல்லை இறுக கடித்துக்கொண்டு
அத்தெடுத்து எறிந்தேன்
எடை குறைந்தது
பறக்கத் துணிந்தேன் மீண்டும்
சிறகு கணத்தது
வலியால் துடித்தது
இறகுத் துவாரங்களில்
கண்ணீர் விட்டது
ஒவ்வொரு அவயமாய்
அத்துப் பிய்த்து வீசினேன்
சூரியன் தொட்டு விட்டால்
வலி கரையுமென
கண்டது அத்தனையும்
கடித்தேத் துப்பினேன்
வாழ்க்கைச் சிரித்தது
முகமூடி கழற்றிவிட்டு
நீந்தத்தானே சொன்னேனென
அண்ணாக்குத் தெரிய நகைத்தது
அழுதேன்
சிரித்தது
அழுதேன்
சிரித்தது
அழுதேன்
சிரித்தது
மன்னிப்புக் கேட்டுப் புரண்டேன்
பின்வருத்தம் வெகுண்டேன்
சுயம் வெறுத்து கணைத்தேன்
ரெக்கைப் பிய்த்தெரிந்து
வன்மையற்று விழுந்தேன்
கோழியை காரித்துப்பி
தங்கமீனொன்றை
துரத்திப் பிடித்தேன்
கால்களை கத்தரித்து விட்டு
வாலொட்டிக் கொண்டேன்
தோள் உரித்து விட்டு
செதிலுடுத்திக் கொண்டேன்
மூக்கறுத்துக் கொண்டு
செவுள் மாற்றிக் கொண்டேன்
உதடுகள் ஒருமித்த வண்ணம்
ஓரங்க அபிநயம் செய்தேன்
கண்கள் கண்ணீரில் இருந்தன
கண்ணீர் பெருக்கெடுத்த வாரே இருந்தது
தெளிவாய் தெரியாத காட்சியில்
வாழ்க்கையின் புன் வதனம் பார்த்தேன்
சிரித்தது
அழுதேன்
சிரித்தது
அழுதேன்
சிரித்தது
அழுதேன்
தாயோளி சிரித்துக் கொண்டே இருந்தது
நானும் சிரித்தேன்
பிள்ளைப் பருவம் தொட்டு
அரிதாரம் அப்பிய என் முகம் அழித்து
அம்மணமாகவே அப்பட்டாய் சிரித்தேன்
தாயோளி அழத்தொடங்கியிருந்தான்
இப்படித்தான்
என் புன் முறுவலை
இரட்சகத் தேவையாய்
இறுக்கப் போர்த்தி நயக்கிறேன்
தன்னிச்சைக்குத் திரிகிறது சுயம்!
- ஹஜன் அன்புநாதன் -

🫂🫂🫂
ReplyDelete