இசை




ஒத்துழைக்கும் ஓசைகளின்

ஒருமித்தத் தொகுப்பு


அவ்வப்போது


ஒருக்களித்து படுத்திருக்கும்

கடைசி நிசப்தத்தின் 

கெட்டச் சொப்பனம்


அவ்வப்போது


சடை பிறிந்து

விழுந்தழுகின்ற ரோஜா பூக்களின்

அமைதிக் கதறல் 


மென்மை பயில்விக்கும்

ஆஸ்தான கூடம்

சீவிக்கும் எதொன்றும்

சிரமமின்றி அருந்தும் கலை 

மனிதன் தோற்றுவித்த

உன்னதமான தெய்வீகம்


நீங்கள்-நான்-இரவு

இந்த சடலங்களை எல்லாம்

அடிக்கடி உயிரூட்டுவது எது?


சீள்வண்டு

ஃபேன் சத்தம்

எரி நட்சத்திரம்

குறட்டை

கொசுவர்த்தி


அல்லது 

நீங்களோ-நானோ-யாரோ

அருகாமை அல்லது தொலைவில்

ஒலிக்கவிட்ட 

ஒரு பாட்டு


உலகப்பச்சியங்களின்

ஒழுக்கச் சங்கமம் தானே பிரபஞ்சம்?


அதே தத்துவம் தானே

இசையும் சொல்லித் தருகிறது?


இசை

ஆன்மாவின் தங்குமிடம்

மலிவான ஞான மார்க்கம்

சௌந்தர்ய வியாபாரம்


நீட்ஷேவையும் பீத்தோவனையும்

ஒரே மேடையில் வைத்தால்

தத்துவவியலாளருக்கான வாக்கை

கள்ள ஓட்டையும் சேர்த்து

செவிட்டுக் காதனுக்கு சேர்ப்பேன்!


சப்தங்களையெல்லாம்

நிசப்தமாய் படைப்பதால் தானே

இசைக் கலைஞர்களுக்கு

வரிந்து கட்டி வக்காளத்துப் பெறுகிறேன்


இசை

பாலுறிஞ்சும் குழந்தையின்

உண்ணாக்கு முனகல் 

கட்டில் உடைக்கும் காமத்தின்

உச்சஸ்த்தாயி ஆலாபனை


சகவாசிகளே

எனக்கென ஓருதவி 

ஓடிவந்து செய்வீர்களென்றால்

என்ன செய்வீர்கள்?


இப்போதைக்கு


என் கதவு தட்ட வருபவரை

கொஞ்ச நேரம் வழி மறைத்து

பாட்டுக் கேட்கிறான் என்னுங்கள் 


வந்தவன் சிந்தனையோடு நின்றால் 

கதவை உடைத்து 

உள்ளழைத்து வாருங்கள்

சத்தமே இல்லாமல்

சங்கீதமாய் ஒரு 

முத்தம் கொடுக்க வேண்டும்

உங்களுக்கும் உங்கள் இதயங்களுக்கும்!

Comments

  1. ஆர்ப்பரிப்பும் அமைதியும் ஒன்னறக் கலந்த
    இந்த
    கவியும், கவிதையும்
    இசையின் இன்றியமையாமையை உணர்த்தும்
    உன்னதமான இசை தான்!

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்டு போங்க