தென்மேல் பருவம்



கேள்

தொல்லை கொடு


அலுவல்கள் முடிந்ததும்

காஃபி குடிக்க கூப்பிடு

பரஸ்பர தனிமைகளை

நிரந்தர நிர்மூலமாக்கு 


மூக முகமே

அடிநெஞ்சு அசைபோடும்

ஆசைகளை பகிர்


உன் காயத்தின் ஆழம்

தெரியாத மூடனா நான்?

வியர்க்கும் விரல்களின்

மென்மை புரியாதவனா நான்?


நீயாய் கட்டமைத்த சுவர்

என்னையும் உன்னையும்

விதி மீற விடாத போது

எப்படி நாம் நிறம் மாறுவது?


சரி

ஆண் வாசம் பிடிக்காதவள் நீ


பிரக்ஞை இல்லாமல்

கன்னம் கைவைத்து

ஒப்புவிப்பதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்

என் பெண்மையின் முகத்திடலில்

என்றேனும் ஒரு கணம்

உடைந்து அழேன்


தீண்டத் துடிக்காதா கரங்கள்?

சேர்ந்து நடிக்காதா கண்கள்?


நீ முகமூடி தரித்திருக்கும் லட்சணம்

அவ்வப்போது மெய் மறந்து சிரிப்பதில்

அலங்கோலமாய் அழகு சிந்தும்

முன்னிருப்பல்லின் வழி அழகாய் தெரிகிறது


உன் பெண்மை

என்னிடம் மென்மையாக சுவாசிக்கிறது!


உனக்கு எனதும்

எனக்கு உனதும் 

அருகாமைகள் பிச்சையிடும்

கண்ணியமான கதகதப்பு

வெறுமைகளை 

கழுவேற்றுவது சத்தியமாய் தெரியாதா?


எது உன் பயம்

எது என் பயம்?


உன் ஆண்மையை சித்தரி 

கவிதைக்கு பேனா மை தொடு


மணவெளி திறந்து

சற்றே தலைசாய்த்து

வல இதழோரம் நீயுதிர்க்கும்

சத்தமற்ற புன்னகையோடு

சத்தியமாய் கேள்

அச்சம் பீரிட்டால்

சட்டைப்பைப் பிடித்துக் கேள்


இது மழைக்காலம்


பாதி நனைந்து

பாதி நனையாமல் - ஆஃபிஸ் 

வந்து குடை மடிக்கும் போது

கண்ணாடி வில்லைகளுக்குளிருந்து

நேரடியாய் நெஞ்சுக்குள்

உறை பனி பெய்யவிடும்

உன் பார்வையை திருப்பாமல்

சத்தியமாய் கேள்


கோழை நான்

ஊமை என் வார்த்தைகள்

னால்

ரு கவிதை என் பதில்


நனைந்து நடந்தவாறு 

காஃபி பகிர என் கால்கள்

மழையோடு கலந்த - உன் 

குரல்கேட்க என் செவியறை 

தேம்பியழ திறந்து வைத்த இதயம்

நிகர் நிறைவாய் உணையுணர

எங்கும் விழித்தவண்ணம் புலன்கள் 

அத்தனையும்

அவ்வொற்றை விண்ணப்பத்திற்காய் 

காத்துக் கிடக்கிறது!


- ஹஜன் அன்புநாதன் -


Comments

Post a Comment

கருத்து சொல்டு போங்க