கைக்கிளை திணை



மௌனத்தைக் காவல் வைத்து
பெருநகரம் உறங்கையிலே
இருட்டின் சலனம் 
இதயத்தை உழற்றையிலே

உயிரோடு இருப்பதை 
நினைவூட்டுவதெல்லாம்
உன் உதட்டுக்குக் கீழ் விழும் 
அழகிய குழி!

விண்மீன் விற்க வந்தவளே!

உலகத்தின் உயர்ந்த விளிம்புகள் 
எப்போதும் என் கால்களை தேடையிலே
ஓய்வெடுக்கப் பாய்விரிப்பது
உன் பச்சை துப்பட்டா!

வாழ்வு...
இருசாராருக்கு...
வாழப்பிடித்தவர்களுக்கு
சாகப்பிடித்தவர்களுக்கு

நீ 
உன் மென்னகை 
ஸ்பரிசம்
பிட்டம் வரை நீளும் முடி
நெட்டை விரல்
நீழுதடு...
நான்
தினம் செத்துப் பிழைப்பதற்கு!

நான் உலகம் புரியாத மூடன்
நான் அசௌகரியம்
நான் அனர்த்தம்
நான் கெட்ட சகுனம்

நீ 
சாப விமோசனம்
சாயங்கால வெய்யில்
சாபல்யம்!

இருட்டியே கிடக்கும் என் உலகம்
உன் கூந்தல் சுகந்தத்துக்குத் தானே
மின்மினி மேய விடுகிறது!

நீயென்பவள் 
கடலை தனதாக்கி நீந்தும்
நீலத்திமிங்கிலம் 
நான்
உன் பரந்த இறக்கைகளின் கீழ் உறவாடும்
சின்ன மீனினம்

உலகத்தின் உன்னதமான செயல்
உன்னோடு நடப்பது.
உலகத்தின் நீண்ட கடல் பயணம்
உன் கண் பார்த்து கதைப்பது.

என் கண்களுக்கு வலிக்க
உன் கண்களுக்கு மையிடுபவளே!

என் வாழ் மீது படிந்த
தடித்தக் கரு நிழல்
உன் மீதும் விழ 
தெரிந்தே அனுமதிக்கக் கேட்கிறாயா?

எத்தனை நாட்களுக்குக் தான்
உன் துப்பட்டா என்னைக் காக்கப் போகிறது?
எத்தனை நாட்களுக்குத் தான்
கிள்ளித்தெளிவிக்கப்போகிறது 
உன் ஆட்காட்டி விரல் நகம்?

உன் வழி நீண்டது
என் கனவுகள் சிறகு மழித்தது 

கருப்புத்திறவத்தில் நீந்தி
கரை தொடும் முன்னே
நரைத்து விடும் நமக்கு

போய் வா
மீண்டிருந்தால் சொல்கிறேன்
நானும் உன்னை காதலித்தேனென

இப்போதைக்கு
"பைத்தியமா?
திஸ் இஸ் ஜஸ்ட் அன் இல்லியூஷன்
ஃபொர் யூ
ஐ ஹேவ் நொ சச் டிசயர்!"

- ஹஜன் அன்புநாதன் -

Comments