அணைக்க மறந்த கதை




பைத்தியம் பிடித்த - கடல்
உறுமிக்கொண்டிருந்தது  
வாகன நெரிசலில் - 
தரை
பொருமிக்கொண்டிருந்தது
இடியோடு கத்தி - வானம் 
அழுதுக்கொண்டிருந்தது
வழமைக்கு மாறாக - காற்று
விசிரிக்கொண்டிருந்தது
நம் உதடுகளில் - சிகரட் 
எரிந்து கொண்டிருந்தது

ஐம்பூதம் ஒருமித்த இரவில்
அந்தரத்தில் நின்றிருந்தோம்
மேம்பாலம்
இருபது கால் விரல்களிலும் - ரேகை
எண்ணிக்கொண்டிருந்தது!

நீ இடப்பக்கம் 
நான் வலப்பக்கம்
நாகரிக இடைவெளிக்கு நடுபக்கம்!

உன் ஒரு கையில் பூங்கொத்து,
உரசி நடக்க வழிவகுத்து 
மழையில் குடித்த தண்ணீரை
மெது மெதுவாய் உதறிக்கொண்டிருந்த 
அந்த ஒற்றைச்சிறுகுடை 
மறுகையில்.

குடையை நான் வாங்கி கீழ் வைக்க
நனைந்த உன்னை பொருட்டில் கொள்ளாமல்
நானளித்த பூங்கொத்தின் 
ரோஜாக்களின் மேல் படிந்த
மழைத்திவலைகளை துவடிக் கொண்டிருந்தாய்

சாபவிமோச்சனம்!

உன் கைப்பையின் 
இரண்டாம் சிப்பரை திறந்து
சிரித்துக்கொண்டிருந்த
டன்ஹில் பெட்டியை வெளியிலெடுத்தாய்
மற்றைய சிப்பரிலிருந்து
லைட்டரை எடுத்தாய்

பற்றவைத்தோம்

போர்வை போர்த்தியிருந்த இரவு
சிகரட் வெளிச்சத்தில்
உடலுலுப்பி விட்டு 
கண் சிமிட்டி மீண்டும் படுத்துக் கொண்டது
நம் தனிமைக்கு இடம் விட்டு

என்னென்ன பேசினோம்?

அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை
பப்புவா நியூ கினி மக்கள்
இயற்கை
கசந்த கடந்த காலம்
கார்கால குளிர்
பூக்கள் - பூகோலமயமாக்கல்

ராசாத்தி!

முத்தமிடுவதற்கு மாறாக
வெப்பத்தில் வருந்தும் உன் உதடுகளை
அனுதாபத்தோடு 
அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்

நீ 
கடலையும்
அவ்வப்போது என் கண்களையும்
இருட்டில் தேடியிருந்தாய்

எத்தனை சிகரெட் நெருப்பு வைத்தோம்?

ஆறு?
என்றால் - என் உயிர் 
ஆத்மார்த்தமாய் குளிர் காய்ந்த தருணங்கள்
வெறும் ஆறு சிகரட் நாழிகள்!

ராசாத்தி!

உன் பெருமூச்சு 
என் இதயத்தின் இரட்டித்த
கதிக்கு
ஆசூவாசம் சொல்ல
உன் கூந்தலிலிருந்து அடித்த வாசம்
உணர்வுகளை 
உலுக்கிக்கொண்டிருந்தது

அவ்விரவு 
அத்தனை அழகு
எத்தனையென்றால்
அத்தனை அழகு

மனநல சிறையிலிருந்து
வான் கோவின் கண்கள் கண்டது போலொரு
வெளிச்ச இரவு அது!

கடைசியாய் கதைத்து 
பல நாட்களை கடந்துவிட்டோம்
அவ்வொற்றையிரவில்
கடைசில் கண்பார்த்து
பல மாதங்களை கடந்துவிட்டோம்

இருக்க 
நான்
மேம்பாலத்திலேயே நின்றிருக்கின்றேன்!

நீ
கண்ணீர் விட்ட போது
கட்டியணைக்காமல் 
சிலை போல் நின்றிருந்த  
என்
கல்நெஞ்ச நொடிகளிலேயே
சிக்கிக்கொண்டிருக்கின்றேன்

பால்வீதியின் மையமே
மன்னித்து விடு
நான் சிறுமை
நீ தேன்கூடு!

- ஹஜன் அன்புநாதன் -

Comments

Post a Comment

கருத்து சொல்டு போங்க