தட்டைப்பயறு
எங்கள் அட்டாளையில் கூடுகட்டும்
வீட்டுக்குருவிக்கு
தேங்காய்த்தும்பென்றால் இஷ்டம்
சில்லிடும் தண்ணீரள்ளி
மூஞ்சிலடித்துக் கழுவும் போதெல்லாம்
கண் மூடும் தருணத்தில்
பக்கவாட்டில் தவ்வும்
கண் திறக்கும் போதெல்லம்
குழந்தை போல் பம்மும்
சோறிடுவேன்
ரொட்டித்துண்டு-
விழுங்காத சுவிங்கம்-
லாலிப்பொப் கடி-
அஞ்சுரூவா முறுக்கு-
புளி டொஃபீ-
அவ்வப்போது தட்டைப்பயறு
குடும்பத்தார் சகிதம்
விருந்துண்ணும் குருவிக்கு
தேங்காய்த்தும்பென்றால் இஷ்டம்
பூண்டு நசுக்கும் போது பிளந்தது
கத்திரி குழம்புக்கு அரைக்க உடைத்தது
மாவிளக்கோடு கடிக்க உடைந்தது
காளாஞ்சியில் ஒட்டியிருந்ததென
அத்தனை தேங்காய் நாரையும் பிய்த்து
பாத்திரம் துலக்கவென
மோட்டுவளையில் அதக்குவாள்
அப்பம்மா!
கடைசி தட்டைப்பயற்றுப் பருக்கையையும்
பொறுக்கி விட்டு
சிட்டாய் பறக்கும் சிட்டு
சற்று நேரத்தில் திரும்பும் குசினிக்கு.
செறுகிய பொந்திலிருந்து
பொத்தென விழும்
தேங்காய் தும்பின் சத்தம் கேட்டு
வயிறும் வளையலும் குழுங்க
‘போங்கடி அங்குட்…’டென
புடைத்தவாறே சுளகினை
எட்டி விசுக்குவாள்
நூதனமாய் திருடும் குருவிக்கு
தேங்காய்த்தும்பென்றால் இஷ்டம்
கன்னத்தில் கைவத்துத் தலையாட்ட
அப்பம்மா சொல்லுவாள்
‘அதுக்கும் குடும்பம்லாம் இருக்கு டா
கூடு கட்டத் தான் தும்பு திருடுது கழுத’
‘எங்கப்பம்மா கட்டும் இந்த கழுத கூட்ட?’
‘மோட்டுவாளைல
அட்டாலுல
தேயல செடிக்குள்ள
கருப்பந்தேயல மரத்துக்குள்ள
பெரிய தொற பங்களால’
அவள் ஊறவைத்துத் தரும் அரிசியை
தேங்காய்ப்பூ சேர்த்துக் கொறித்தவாறே
யோசனையில் ஆழ்ந்திருப்பேன்
விறகெடுக்கத் தாத்தா
அட்டாளைக்கு ஏறும் போது
வால் பிடித்துக் கொண்டே
குருவி பார்க்கச் செல்வேன்
ஏணி வழுக்கும் என்பார்
வழுக்கட்டும் ஏணி என்பேன்
இஸ்தோப்புக்கு மேல் கூரையில்
கூடு கட்டியிருக்கும் குருவி
முட்டையும் ரெண்டு மூனிருக்கும்
சந்தோசத்தில் நான் கத்த
கூரைத் தகரத்து வழியாய்
மெல்லக் காத்தடிக்கும்
பாம்பு வருமென பயந்து
கூடுகலைக்கத் தாத்தா
முனையும் போதிலெல்லாம்
கப்பமாய்
கன்னத்திலொரு முத்தம் வைப்பேன்
சுருங்கிய கன்னம் துவர்க்கும்!
குஞ்சுப்பொறித்தச் சத்தம்
நெஞ்சை கடிக்கும் போது
தட்டப்பயறோடு அட்டாளைக்கு விரைவேன்
என்னைக் கண்டதும்
அடரும் அவற்றின் அரவத்திற்குப் பயந்து
விட்டெரிந்துவிட்டே
தட்டைப்பயற்றை
ஓட்டமெடுப்பேன் விரைவாய்
ஆவணி மாதம் எரிந்த எங்கள்
ஏழாம் நம்பர் லயத்தோடு
குருவிகளும் தீக்குளித்தன
எங்கள் உடமைகளோடு சேர்ந்து
தேங்காய்த்தும்பும் சாம்பலானது
நகருக்கு நகர்ந்து விட்ட போதும்
தட்டைப்பயற்றினை காணும் போதெல்லாம்
சட்டைப்பையுக்குள் எட்டிப் பார்க்கின்றன
வீட்டுக்குருவிகள்,
ஐந்தாண்டுக்கு முன் செத்தத் தாத்தா
கன்னத்தில் முத்தம் வைக்கின்றார்
வெற்றிலை வாசம் கன்னத்தில்.
- ஹஜன் அன்புநாதன் -
.png)
Comments
Post a Comment
கருத்து சொல்டு போங்க