நாஸ்தென்கா...

 




 நான்கிரவுகளில் நாஸ்தென்கா நடத்தி நடந்த காலக்கோலங்களை கண்மூடி கிரகித்தவன், கனவிதுவோவென ஒரு நொடி திகைக்கிறான். மறுநொடி, தன்னிச்சைக்கு ஒரு சூழ்நிலைக்கு தள்ளிவிட்டு சிரிக்கும் வாழ்வையும் காதலையும் எண்ணி அதே நதியின் சலசலப்பு மௌனமாக ஒரு மோனப் புன்னகை புரிகிறான். விழிகளில் துளிர்த்த கண்ணீரை துடைத்தவன் மீண்டும் புன்னகைக்கிறான்.

 

ஊளையிடும் தென்றலின்

புலம்பலை கேட்டவாறே

புருவங்களில் பனி படர

நேற்றின் கதப்பில்

குளிர் காய்கிறேன்

 

நீயமர்ந்து கடந்த

பிட்டம் படிந்த தடங்களில் மட்டும்

பனிக்கு மாறாக

டியூலிப் இதழ்கள் பொழிகின்றன

 

புன்னகையோடு அமர்ந்திருக்கும்

என் விழிகளை பார்த்து

மௌன நதி - கற்களை

முத்தமிட்டு கடக்கிறது

 

நாஸ்தென்கா!

 

கருத்த இரவுகளில்

வெள்ளைத் தூவிய உன்னை

எப்படி வெறுப்பது சொல்?

எதையெண்ணி வருந்தவென சொல்?

 

காற்றுக் கடத்திய சிறுபொறிகளில்

வெறிகொண்டு எரிந்த நம் காடு

காலம் பொழிந்த மழையில்

அனைந்து முடிந்தது

 

இருந்தும்

காரீயங்களை விநியோகிப்பதற்கு பதிலாய்

அன்னத்தோகைகளைத் தானே

விட்டுச்சென்றது உன் காதல்

 

பாழ்பட்ட வாழ்க்கை

சீர் கொண்டு உன்னை சந்திக்க வைத்தது

அடுத்த நொடிகளை

நம்பிக்கையுடன் கழிப்பதற்கென கருதுகின்றேன்.

 

நஸ்தென்கா

போய் வா மகராசி!

 

நாளையோர் நள்ளிரவில்

நாம் சந்திக்க நேரலாம்

 

இதே நகரம்

இதே நதி

இதே நாம்

 

அப்போது ஒன்று கேட்பேன்

 

என்னை ஆரத்தழுவிக் கொள்

முத்தம் வைக்க வேண்டும் நெற்றியில்.


- ஹஜன் அன்புநாதன் -

x

Comments