சாவு நேரா மரணம்




செல்ஃப் போட்ரைட்

குளிர்காய அறைநீங்கும் என் பூனை,
முடி கருக சப்பாணி போடுவது வலிகளுக்கருகில்.
வெப்பம் அதன் குளிராகவும்
குளிரே அதை நீவும் கங்கெனவும்
வெறுமையின் உச்சத்தில் உணக்கை உணர
மழை சோவென பொழிகிறது.
கண்ணீர் கொட்ட முயன்று
சோர்ந்தே தூங்கிப்போன பூனைக்காய்
மௌனித்தே கதைக்கின்ற இடிமின்னல் பார்த்து
இரைமீட்டக்குருவியும் சத்தமின்றியே
தொட்டிலாட்டுகிறது.
அட்டாளைச் சுவரில் பட்டாம்பூச்சிகள் மழைக்கொதுங்க
செல்லப்பூனையின் அசைவுகளுக்கிணங்கி
சதைக்கரைச்சான் இலைகள் மழைகளை
தரையிறக்குகின்றன.
உடலெங்கும் பொசுங்கிக்கருகி வலியின் கதகத்தப்பில் 
மழலைபோல் குறட்டை விடுகிறது என் செல்லப்பூனை.
மழைத் தேம்ப, தும்மும் காற்று.

...

 

மரணத்தின் ருது ருசி
 
உயிர் கேக்கும் ருசிக்காய் உடலுக்கு
ஈமக்கிரியை நிகழ்த்தி
பிண்டச்சோறு உருட்டி
நா படாமல் விழுங்கிய போது 
அஸ்திக்குவளையில் விரல் பட்டுத்தேய
வெளிவந்த பூதம்
மரணத்தை இரவல் தந்து
செத்த என் உடலத்தை மீண்டும் சவமாக்கி
கங்கையை ஒருதுளியாக்கித் தெளித்து
தோல்கிழித்துப்புகுந்து 
மீண்டும் ஜீவமாக்கிக்கொள்ள,
நான்
ஜீவனை இரவல் வாங்கி 
மரணத்தை உமிழ்கின்றேன்
நான் இப்போது
ஒரு பூதம் ஒரு மரணம் அல்லது பிண்டச்சோறு.
...
 

சீழ்

எனக்குள் கணக்கின்ற கனல்
தொடுவதெதையும் கருக்க
ஸ்பரிசங்களை சுருட்டிக்கொள்ளும் 
நத்தையாகி
சுடுமணல் பரப்பிய வெளியில்
உடல் தேய்த்து நகர
கிழிபடும் சதைகளில்
உப்பென கண்ணீர்.
உயிர் மட்டும் உச்சஸ்தாயியில்
காதலறக் கத்த
லயம் பிழைக்கா மௌனங்கள்
கன்னத்தில் வறண்டு வடிகிறது.
கானல் பொய்க்கிறது
மெதுமணல் சுடுகிறது
ஈரமென ஒரு துளி காதல்
தணிவென ஒரு துளி பரிவு
வாழ்க்கையே!
ஏதொன்றேனும் கொடு!
சுரக்க மறுக்கின்ற  திரவம்
உடலரித்துக் கொல்ல
வலியனைத்தும் உனக்கான சாபம். 
...

சாவு நேரா மரணம்


கண்களுக்கெட்டும் வரை இரவு.
பெருங்குடல் உறைக்கும் குளிர்.
வசந்தமென வெப்பமென 
தொடுதூரம் உன் விரல்.

எக்கிப்பிடிக்கும் அண்மையில்
உன் ஆட்காட்டி விரலிருக்க
எட்டிப்பிடிக்கும் ஏக்கம்
சாவு நேரா மரணம்!

அழுகையெனை மாய்க்குமென
புன்னகைப்பொய்களால் 
உதடுகளை தண்டித்துக்கொள்கிறாய்.

புன்னகையோடு நீதரும் பிரியாவிடை
கொடியதடி கொடியதடி
மாறாய்
சதைமாய்த்து 
ஊன் தின்று
குருதி குடித்து போவென்கிறேன்.
கண்களை துடைத்துக்கொள்
கண்மணி என்கிறாய்.

பாரிஜாதமே 
என் காதுகளை பிய்த்து 
எரிமலைகளில் குடியேற்று.

தொட்டால் பூக்கருகும் -என் 
விரலை பற்றிக்கிடந்தவளே
மரணத்தை குடிவைத்த - என் 
மடியில் தலை சாய்த்தவளே
நிகர்பூரண பரிசுத்தமே 
இத்தனை நடந்த பின்னும் எங்கனம் 
புன்னகையால் ஆசீர்வதிக்கிறாய்?

ஒரு முறை மன்னி-என 
மீண்டும் உன் கதகதப்புத் தேட
முறைவாசல் செய்யும்
எண்ணிலி நாடகத்தை
இம்முறை நிராகரிக்கிறேன்.

செரி
கண்களை துடைத்துக்கொண்டேன்
உன் சுவாசத்தை உள்வாங்கிக்கொண்டேன்
நீ தந்த ரோஜாக்களை 
காது சூடிக் கொண்டேன்

என் உதட்டிலும் புன்னகை
போய் வா...

நம் காதல் நமக்கு
மரணத்தின் தலைவாசல்
இப்பிரிவு நமக்கு
ஜனனத்தின் தண்ணீர்குடம்.
...

Comments