ப்ரூம்ஹில்டா

 

இன்னுங்கொஞ்ச நேரம்…
இறுக கடித்துக்கொள் உன் பட்களை 

பருத்திப்பூ ரெண்டு பரித்து
மார்பக வடுக்களில் வடியும் 
ரத்தம் துடைத்துக் கொள்

ப்ரூம்ஹில்டா...
அழகான பேருக்குச் சொந்தக்காரியே!

ஆண்டுகள் ஆகிறது – உன் 
ஆசை முகம் பார்த்து 
ஆறுதல் இல்லாமல் தேய்கிறது – உயிர்
ஆதுர பார்வைகள் தீர்ந்து

மலைகளை மிதித்து
கடல்களை குடித்து
காடுகளின் பச்சைக் கூந்தல் தின்று
எரிமலைகளில் மேல் கழுவி
உனை தேடிய பாதையில்
பாதியை கடந்து விட்டேன்

இன்னும் கொஞ்சம் தான் 
மிஞ்சியிருக்கிறது உலகில்

ப்ரூம்ஹில்டா…

உன் சுருள் முடித்தேடிய – இந்த
ஓட்டம்
ஒய்வுகள் இல்லாமலும்
ஒய்யாரமாய் தெரிகிறது 

நீ…
எங்கிருந்தாலும் சரி
மிசிசிப்பி பக்கமிருந்து வீசும் காற்றுக்கு
உன் முதுகு காட்டி திரும்பியிரு
நானனுப்பிய முத்தங்கள்
ஆசுவாசமாய் அந்த 
கசைத்தழும்புகள் மீதமரட்டும் 


ப்ரூம்ஹில்டா...
அழகான இதயத்தின் சொந்தக்காரியே!

பருத்திக்காட்டில் வியர்த்து
வெயில் வெந்த உதட்டோடு
இரவுக்கு முந்திய பகல் பொழுதில்
கால் விலங்குக்குக் காயப்பட்ட கணுக்காலில்
கண்ணீர் கலந்து 
முத்தம் வைத்தாய் நினைவிருக்கா?

இன்று வரை அது தான்
அன்னிய உலகிலென்னை 
அச்சுப் பிசகாமல் நடக்க வைக்கிறது 

ப்ரூம்ஹில்டா...
அழகான நினைவுகளின் சொந்தக்காரியே!

சூரியன் வருத்தெடுத்த பாதையில்
புழுதி பூதங்கள் என் கண்களை கடிக்கின்றன
பூட்ஸின் ஒரு பாதி-தின்று
பாதத்தின் தோல்களை தட்டி 
தண்ணீர் கேட்கின்றன

ஹில்டி!
விழித்தே இரடி தெய்வமே

ஹில்டி!
விமோட்சனம் விரைந்து வருகிறதென்று
நம்பிக்கையோடு சிரித்து நடி தங்கமே

ஹில்டி, என் காதலே!

குளிரடிக்கிறதா?
வெயில் படுகிறதா உன் பொன்னுடலில்?
கூதலுக்கு கம்பளி போர்த்தினாயா?
வெள்ளை நாய்கள் பிட்டம் கிள்ளுகின்றனவா?
அடிமைச்சந்தையில் ஆப்பிள் தேடி அலைகிறாயா?


ஹில்டி, என் உயிரே!
எங்கேயடி இருக்கிறாய்
உன் உயிரை இங்கே தவிக்க விட்டு.

தேம்பிக்கொண்டிருக்கிறாயா - என்னை
தேடிக்கொண்டிருக்கிறாயா
பருத்திப் பூக்களின்
வெள்ளை மயிர்களை
கோதிக்கொண்டிருக்கிறாயா?


தனிமை கவ்வும் போதெல்லாம் 
மேற்கு அடிவானம் பார்
கருப்பு வேசியென 
வெள்ளையன் திட்டும் போதெல்லாம்
உன் புன்னகையின் அகலம் அள
ஓய்வு கிடைத்தால்
வான் பார்த்தமர்ந்து காற்றுக் குடி.


ப்ரூம்ஹில்டா…
அழகிய வசந்தகாலத்தின் சொந்தக்காரியே!

இன்னுங்கொஞ்ச நேரம்…
இறுக கடித்துக்கொள் உன் பட்களை 

காதல் தூரத்தில் நான்.

_ஹஜன் அன்புநாதன்_ 

Comments

Post a Comment

கருத்து சொல்டு போங்க