அந்தி மழை



 

தூரத்து மேகம்
துளி துளியாய் தன்சேமிப்பை
குளிரூட்டிக் கொஞ்சம் 
மழையெனத் தூவி
செலவு செய்து செல்ல

குளிர் தரும் குதூகலத்தில்
குழந்தையாய் மனம்
ஜன்னல் திரை விலக்கி
ஜன்னலையும் திறக்க

அந்தி வண்ணாத்தி
மலர் மஞ்சத்தில்
மதுரமுறிஞ்சிப் பறக்கும்
மௌன மரணத்தில்
இலைகளை அசைத்துக் காற்று
அனுதாபம் செய்கிறது

மீண்டும் ஒரு மௌன மரணம்!

எதோ ஒரு எச்சத்தை
அசை போட்டு அசை போட்டு
அழகிய நினைவுகளை
ததும்பத் தருகிறது ஏகாந்தம்

மண்ணோடு மழை சேர்ந்தச் சுகந்தம்!

புற்றீசல் புறப்பாடுகளில்
மலைக்குருவி ஒதுங்கலில்
நத்தை நகர்வில்
திடீர் குளிரில்
 
 
ஏனோ ஒர் புதினப் புழுதி
இயற்கை பேர்கொண்ட
பெரும் புதிராய் சப்தமிடுகிறது

பேரரசு வீழ்ச்சியில்
சிற்றரசு எழுச்சி!

மேற்கு அஸ்தமனத்தில்
மேக மத்தியில்
மெல்லொளியுடன் 
திறள் திங்கள்!
 
சூரிய வீழ்ச்சியில்
திரள் சூழ் அரை நிலா!

கைகளை நீட்டுகிறேன்
நீலவானத்தை ஏகமாய் சுருட்டி
ஒற்றைத்துளியாய் கையில் 
ஈகிறது இயற்கை

அழகாய் உதிர்ந்த அந்த சொட்டு
அத்தனை அழகை சுமக்க சிணுங்கி
இத்தனை அழகாய் கையில் விழுந்ததோ

அதோ - இன்னோர் 
கூறை முனை மழைசொட்டில்
மரணப்படுக்கையில் சூரியன்
தொத்திக்கொண்டாடுகிறது
அந்த சொட்டுமென் கையில் விழும்!

ஈரச்சிறகுடன் வீட்டுக் குருவியொன்று
மாமர மரக்கிளையில் குந்தி கிடக்கிறது
அலகை அசைத் தது,
மழை ரசிக்கிறதா?
குளிர் வெறுக்கிறதா?

 

ஆறியத் தேநீரும்
தேக்கிய சுவையை
நடு நாக்கில் நயக்கி
அணைந்தே போகிறது!
நாய் குட்டியும் என்னை
அரவணைக்க இழுக்கிறது

குளிரை விடுக்கவும் மனமில்லை
குளிரால் நடுங்கும் வகை உடலில்லை

அனுமதித்த ஈசல்களே அதிகமாயிற்று
ஜன்னலை மூடும் நேரமாயிற்று!



           - அன்புநாதன் ஹஜன்  -

 

Comments

  1. இதயத்தின் எழுத்தாளர் ..♥️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்