இருபதுகளில் நான்!





இதோ 
என் பதின்மத்தின் கனவுப் பருவம்
இதோ
என் இத்தனையாண்டு பெருந்தவத்தின்
பெருஞ்சாபம்

ஏதேதோ தொலைத்து விட்டு
ஏதேதோ தேடிக்கொண்டிருக்கிறேன்

முட்டி வலிக்கிறது
முதுகு நோகிறது
நெட்டி முறிக்கையிலே
நெஞ்சு வேகிறது

என் சுதந்திரம்,
காட்சட்டையின் பின் பாக்கெட்
பணப்பையிலும்
முதிர முயற்சிக்கா பெற்றோரின்
அன்பு அச்சுறுத்தலிலும்
வந்து வந்து போகும்
பருவத்து செமஸ்டரிலும்
வர்த்தக போட்டியில்
மண்டையை மழுங்கடிக்கும்
சமூக ஊடகத்தின் உள்ளங்கையிலும்
சிறைப்பட்டுச் சிரித்துக் கொண்டிருக்க

என் சுதந்திரம்
என்னிடத்தில் மட்டும் இல்லை

மூன்றாம் மனிதராகும்
முத்தந்தந்த உறவுகள்
மூன்று நிமிடத்தில்
முத்தி விடும் மேகி

மனம் கெட்டுப்போய் கிடக்கிறது
உடல் கேடு கெட்டுப் போய் கிடக்கிறது

என்ன படிப்பது எதை படிப்பது
எப்படி படிப்பது எங்கு படிப்பதென்ற 
எனக்கான கேள்விகளுக்கு
யாராரோ கையுயர்த்தி
என்னென்னவோ பதிலெழுதுகின்றனர்

என் சிரிப்பை எங்கு பறிகொடுத்தேன்
என்பது புதிர்
நடிக்க மட்டும் எங்கிருந்து சிரிப்பை உடுத்துகிறேன்
என்பதுவும் பெரும் புதிர்

பெற்றவர் கை பார்த்தே இன்னுமென்
பொருளாதார தேவைகள் இருப்பது
கசையால் அடித்து கலங்க செய்கிறது

நீலப்படங்களின் நீட்சியிலேயே
முடங்கிக் கிடக்கும் கலவி அறிவு
பருவம் பரிதவிக்கும் வேளைகளில்
கரமைதுனமே துணையென்றான
பகுத்தறிவு தொடாத  சமூக நிலை  

ரெண்டு புத்தகம் புரட்டிவிரட்டு
புழுத்தும் புத்தி ஜீவிகள் மத்தியில்
அதிகம் பேசி வாதாட முடியா நிலை
நெஞ்சுக்குள் குமுறிவிட்டு
நெஞ்சார பொருமிவிட்டு
நடக்க நேரிடும் அவலம்

எங்கே என்னப்பிழை விட்டேனென 
ஊகித்து வியக்குமுன்னே
இலக்கியமாய் அனுபவித்த காதல்
ஈமொக்க வடு கொடுத்து நீங்க

எழுதிய கவிதைக்கு 
எழுத்துப்பிழைப் பார்க்க வக்கில்லை
எழுத்துப்பிழைக்குப் பின்னர்
அச்சகம் தேடி போனால் 
சிபாரிசு வசமில்லை
மாற்றான் கால் பிடித்து
ஈன்றெடுத்தக் குழந்தைகளை
இரும்புக்கு ஈச்சம்பழம்போல்
விலைபேச தெம்பில்லை

அழுகிறது
என் ஆன்மாவின் விந்துச் சிதரலில் 
அழகாய் உயிர் கொண்ட  படைப்பு!

பிடித்த வேலைக்கு
அடி கிடத்த நடையெடுத்தால்
எனக்குமுன்னர் அங்கே
படையெடுத்து வந்து நிற்கிறது
பரிந்துரைக்குப் பிறந்த பணக்கார வர்க்கம்

சரி 
கிடைத்த வேலைக்கு 
முறையாய் விண்ணப்பிக்க முனைந்தால்
பிராயோக பதில்கள் 
கொழுத்த முதலாளிகளை 
எரிச்சலூட்டி  
நிராகரிக்கச் செய்கிறது
வெள்ளோந்தி என்னை

சிறுவனனல்ல நீ
சிரிக்காதே
அதிகம் கதைக்காதே
இறுக்கமாய் இரு
அழுவது இழுக்கு
செய்யத்தகுந்ததிது
செய்யத்தகாததிதென்று
ஒன்றொன்றாய் என்மீதடுக்க
தாங்க முடியா கனம்

இப்படி வாழ் 
இதை  செய்து மூச்சிழு
இது செய்தால் நீ மனிதன் என்று
என் வாழ்வை நான் வாழ
யாராரோ சொன்ன கருத்தியல்கள்
நிறுத்தாமல் துறத்தி என்னை
கபளீகரம் செய்கிறது

கலையென நான் ரசிப்பதை
கலையே இல்லை அது
இதை ரசி என்றொன்றை நீட்டி
நல்லப்படமென நான் பார்க்க நாடுவதை
நாசக்காரப் படம் பார்க்காதே அதையென்று
என்னை சுற்றி நானறியா ஒரு நனோ அரசியல்

புத்தகம் படித்தால் புத்தி நிலைக்குமென்று
பதிலீட்டுக்கு பக்கம் புறட்ட எத்தனித்தால்
தங்கத்துக்கு நிகறாய் துலாவிலிருக்கிறது
நல்லப்புத்தகத்தின் விலை

இத்தனை விரக்தி 
மனிதர் பழக பயம்
அச்ச உணர்வு
தாழ் மனப்பாங்கு
மனவழுத்தம்
மனச்சோர்வு
ஏக்கம்
கூடாத் தனிமையென
இத்தனையும் எங்கிருந்தென்றுப்பார்த்தால்
அத்தனையும் யாரோ செய்யும் 
அரசியல் சுயநலமென்று
சத்தியமாய் தெரிகிறது

இருந்தும் 
எங்கென சென்று
என்னவென்று முறையிட்டு அழ?

புன்னியவான்களே
இது என் தனிமனித பிரச்சினையல்ல
என் வயது சகாக்களின் சார்புப் புலம்பல்
ஒரு தலைமுறையே
செத்துக் கொண்டிருக்கிறது
உம் பண்டிதர் வைத்து
கூட்டணிக்கிழப்பி
சாசனம் செய்யுங்கள்
அந்த சாசனம் எமக்கென ஒரு பிரசுரத்தை நிறுவித்தரட்டும்!


- அன்புநாதன் ஹஜன் -









Comments

Post a Comment

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்