நட்சத்திரங்களடி

 







இயற்கையழைப்பில்

ஒரு நல்லிரவில்

ஒரு மென்னிரவில்

தூக்கத்தோடு வெளிச்சென்றேன்


மேகங்களை உதிர்த்துவிட்டு

குட்டைகளை திறந்துவைத்த மழை

தூரல்களில் நனைந்துவிட்டு

ஈரத்தில் பிசைந்திருந்த காற்று


தண்ணீர்ப் படாது 

தாவித் தாவிக் கொள்ளையடைந்து,

பெரும்பாறையொன்றின்

சிறுஇடுக்கில் கடமைமுடித்து,

மெல்லத் திரும்பினேன் 

சாமக் கலக்கத்தில்


காலுரசும் பூனையாய்

கவட்டை நுழைந்து

கண்ணில் பட்டதொரு மின்மினி


கொளுத்தக் கருப்பில்

தொலைந்திருந்த இரவில்

வெளுத்த நிறத்தில் 

தொடர்ந்துவந்ததந்த பூச்சி


தட்செயலோ

திட்டமிட்டோ

உயரப்பறந்து

உறுமாற்றிக் கொண்டது


விழித்துக்கொண்டேன்

மின்மினிகண்டு

பல்லாயிரம்

வின்மினிகண்டு


பூக்களைப் பறித்துரசிக்கும் நாம்

மகரந்த மணிகளை 

கண்டுகொள்வதேனும் இல்லையே!


அவை மகரந்தங்கள்...

ரசிக்கப்படாத மகரந்தங்கள்

நிலாப் பூ புசிக்கப்பட்டதில்

ருசிக்கப் படாத மகரந்தங்கள்!


பிரம்மாச்சாரி செதுக்கிய

அம்புலி அணிகலனின்

சேதாரத் துணிக்குகள் அவை


வாங்கவோ- சேர்க்கவோ

வாடிக்கையாளரின்றி

நிலாப்பாட்டி வீசிவிட்ட

வைர வடைகள் அவை


ராத்திரி சுந்தரியின்

ரவிக்கை ரத்தினங்கள்

வானக் கடல் அலவும்

வைடூரிய மீனினங்கள்


வரையுங்கள் வரையுங்கள்

புள்ளியுண்டு கோலமிங்கே

கிறுக்குங்கள் கிறுக்குங்கள்

நல்ல நல்லக் கவிதைகளை


இத்துணை அழகையும்

வாரியேங்கோ கொடுத்துவிட்டு

எத்தனை இரவுகளை

நித்திரையில் கெடுத்துவிட்டேன்


ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்

கற்கண்டாய் கற்கண்டாய் 

கடைவாயில் கடிக்கத்தாரும்


சில்வண்டாய் பொன்வண்டாய்

அங்கங்கே எஞ்சுவரில்

அழகழகாய் பதித்துத்தாரும்


என்னை நானே சபித்துக் கொள்கிறேன்

விண்ணை நோக்காத கடந்தநாள் கண்டு


மன்னித்துவிடு உடுத்திரளே

இயற்கையோடு இசைவடைய

இத்தனை நாட்கள் எனக்கு! 


மலர் மட்டும் நுகர்ந்துவிட்டு

மகரந்தம் மறந்துவிட்டேன்

மகரந்தம் நுகர்ந்துயின்று

மத்தது மறந்துவிட்டேன்.



- ஹஜன் அன்புநாதன் - 

Comments

Post a Comment

Popular posts from this blog

முத்தங்கள்

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்