காதல்






நியூட்டனின் நான்காம் விதி
மூன்றாம் உலகப்போர்

காலப்பயணம்
கடைசி நட்சத்திரம்

சாத்தானின் சவுக்கு
தேவதையின் ஸ்பரிசம்

சூன்யம் - சுகந்தம்
கவிதை - கசையடி

உலகத்தின் முதல் மர்மம் 
உலகத்தின் முதல் தெளிவு

தேடல் - வாடல் - ஊடல் - பாடல்
இத்தியாதிகளின் பிரத்தியேகக் கலவை
ஓர் நிசப்தம் - பேரிரைச்சல்
வண்ணக் கலவை – நிறமற்ற வானவில்

திருப்பித் திருப்பி விளக்க நினைத்தும்
திருப்பித் திருப்பி முளைக்கும் 
மர்மத்தெளிவு

கடுமையானதென்று 
காதலை,
கடிந்து விட முடியாது
காதல்..
முத்தங்களையும் சோபித சித்தங்களையும்
ஏற்படுத்தித் தருகின்றது

மென்மையானதென்றும் 
மெச்சிவிடக் கூடாது
காதல்....
யுத்தங்களையும் 
அச்சமிக்க சப்தங்களையும்
ஏவி விட்டிருக்கிறது

தூக்கம் தொலைத்து விட்டு
கனவுக்குக் காத்திருக்கவும்
டேட்டா தொலைத்துவிட்டு
மறுமொழிக்குப் பார்த்திருக்கவும்

நிகழாததை நிகழ்த்திக் காட்டவும்
நிகழ்வதெல்லாம் நிறுத்திக் காட்டவும்
எதிர்மறையாய் எத்தனிக்கும்
அன்பின் பிரயத்தனம்

கேள்வி கேட்டு விடைத்தேடவும்
விடைகொடுத்து வினாத்தேடவும்
புதினங்களை பிரசவிகின்ற 
பூந்தோட்டம்

காதலிப்பவனை கத்தியழைத்தால்
நிலாவுக்கு கைக்காட்டுகின்றான்
காதலிப்பவளை கத்தியழைத்தால்
மழைத்துளிக்கு கைநீட்டுகின்றாள்

கோளாறு!

என்னதான் இக்காதலென்று
எக்கிப் பார்க்கையிலே
உருக்குலைத்துப் போட்டு
உன்னைப்பார்த்து சிரிக்கும் 
வாய்ப்பேசாக் குழந்தை

திளைத்தவன்
தொலைத்தவன்
விளைபவன்
எல்லாப் பிரிவிட்குறியதையும்
பிரவாகந்தள்ளிப் பித்தனாக்கும்
பேராற்றல்!

அண்டத்தின் ஆச்சர்யம்
அகிலத்தின் அந்தாதி
அமர நிலை
அழகுப் பிழை
அனைத்தும் இதுதான்
அன்பு!
காதல்!
காமம்!


- அன்புநாதன் ஹஜன் -


Comments

Post a Comment

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்