ஆறாம் புலன்

 

 




என் ஆறாம் புலன் திறந்திருக்கிறது
மனவெளியெங்கும் வெள்ளையடித்த வாசம்
அங்குமிங்குமாய் ஒரு மந்திக் குதிக்க,
பரிபூரணமாய் உணர்கிறேன்
 
மனசின் அசடுகளை-அண்டத்தின்
கடைசி மூலையில்
கழற்றி எறிந்து விட்டு
தனிமையின் மாட்சிமையை
கட்டியிறுக்கிக் முத்தமிடுகிறேன்
 
இது தான் நான்
தனித்துவமான பிரபஞ்சப் பச்சியம்
இதுதான் என் முணகல்
அதீதத்தின் பெருமூச்சு
 
ஏகாந்தமென்பது ஏத நிலை
அந்தரத்து ஊசல்
புதிதாய் பிறப்பளிக்கும்
தாபதப் பேறு
 
இங்குதான் முகமூடிக் கழற்றி
மூச்சிழுத்து விடுகிறேன்
இங்குதான் நாடகமாடி
காலாறி சிரிக்கிறேன்
 
சமூக வண்டின் இரைச்சல் பொறுக்காது
ஓடியொழிய வொரு தாழ்வாரந்தேடும் போது
அள்ளியணைத்துக் கொண்டதன் கூட்டில்
தற்காலிக தாழிடுகிறது தனிமை
 
பிரசவித்தக் கவிதைகளை
பிழைத்திருத்தம் பார்க்குமிவ்விடத்தில்
லௌகீக தோலகற்றி
நிர்வாணமாய் நித்திரை காண்கிறேன்
 
சோபிதக் கிரக்கம்!
 
மிகத்தெளிவாய் பேதலித்து
துள்ளியமாய் எனையுணர்கிறேன்
 
நான் தான் இறைவன்
முடிந்தவரை ஓதுங்கள்
செவி கொடுக்க மாட்டேன்
 
நான் தான் சாத்தான்
முடிந்தவரை ஒண்டுங்கள்
சவுக்கெடுக்க மாட்டேன்
 
சுயம்பாய் சகலதாகி
சௌந்தர்ய சூன்யமாகி
ஆழ்பவனாய் ஆட்சிக்கடிமையாய்
இறையாண்மை படைக்கிறேன்
 
பாதம் பதிக்கிறேன் பால்வெளியெங்கும்
இயற்பியல் இடிகிறது
எதிர்திசை சுழற்றுகிறேன் பந்தை
புவியியல் சிதைகிறது
 

இந்த நிலைதான்
பிராப்தத்தின் பொக்கிஷம்
சாபல்யத் தீர்வு
ஒட்டுமொத்த வேண்டுதல் 
 
திறந்திருக்குமென் ஆறாம் புலன்
என் தேவைக்கதிகங்களை
உமிழ்ந்துக் கொண்டேயிருக்க
யதார்த்த நிலை கடந்து
தவழ்ந்து கொண்டே இருக்கிறேன்
 
தனிமை ஈன்றெடுத்த          
மகத்தான குழந்தையாய்!



- அன்புநாதன் ஹஜன் - 


Comments

Post a Comment

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...