கடைசிச் சீம்பாற் துளிகள்




மாசக் கடசி

மஞ்சக்கவுறடவு

சோறு பொங்க என்ன செய்ய

புருசேந்திங்க ஏத விக்க


கடன் வாங்கி ஒலவைக்க

கடந்தார யாருயில்ல

ஊருக்குள்ள நம்மலாட்டம் 

கடங்காரன் யாருமில்ல


சீனி வள்ளி சுட்டுருக்கு

தொட்டுக்கத் தொவயருக்கு

விருந்தா நெனச்சுக்கப்பு

இப்பதிக்கு கடிச்சுக்கப்பு


கொள்ளையில கொடி விட்டு

கோணலா வளஞ்சோடி

கொத்தாப் பூ பூத்து

வெளஞ்ச கெழங்குப்பு

வெந்து கொழஞ்சக் கெழங்குப்பு


வெரசா மெல்லு

தண்ணி குடி

கோழி கறியிண்ணு

கருத்தா கடி


பத்தோ பதனஞ்சோ

இன்னும் கொஞ்ச நேரம்...


ஒங்கொப்பன் வருவான்

தள்ளாடி வருவான்

கள்ளாடி புத்திக் கெட்டு

தள்ளாடி வருவான்


செனமாடா வந்திடிப்பான்

மானங்கெட்டு சண்டழுப்பான் 

ஈரங்கெட்டு என்னடிப்பான்

சோறுலன்னு ரெம்படிப்பான்


ஆத்தா என்ன யெண்ணி

கோவங் கொதிச்சாலும்

வீராப்பு கொள்ளாத

வேட்டித் தூக்கி நிக்காத

போன மாசம் இந்தத்தேதி

மாசவலி வாசநிக்க

வலி பொறுக்காம

வட்டி சோறு பொங்காம

கட்டலுலப் படுத்துருந்தேன்


ஒடம்பு முடியாம

கறியாக்கி வைக்காம

சுருண்டுப் படுத்துருந்த

என்ன மொரச்சிப்புட்டு


எட்டி எடுத்துவச்சி

கிட்ட நடந்து வந்து

எத்தி ஒதச்சான் – ஒங்கப்பன்

ஓங்கி அரஞ்சான் 


ரெத்தக்கர ஒட்டிருந்த

ஓட்டத் தச்ச சீலையில

பாவி மவெஞ்செருப்புக் கர

புதுசா வந்து பூத்தக் கர



ராசாதி ராசாவே

என் வவுத்து ரோசாவே

எங்கவல எங்க சொல்ல

யாருகிட்ட போயி சொல்ல


ஒத்தமவே எனக்கிருக்கான்

பள்ளிக்கூடம் போயிருக்கான்

ஒதச்சாலும் மிதிச்சாலும்

பொறுத்தாக வேணும்

வலிச்சாலும் சலிச்சாலும்

பொறுத்தாக்க வேணும்


நீப் படி

நல்லாப் படி

பட்டம் வாங்கப் படி

சில்லாக் கொண்டாடப் படி

யேப்பு..

எட்டுப்பட்டி ராசா!

மெண்டு முழிங்கிகிட்டே - கெழங்கு

துண்ட விழுங்கிட்டே..

கத கேளு

கலங்காம கேளு..


இரும பொறுக்காம

நெஞ்செரிச்சத்தாங்காம

மண்ட கெறங்க

ஈரக்கொல எரிய


எட்டு எடுத்து

இங்கங்க நடந்து

கொள்ள வேலிபக்கம்

குனிஞ்சி இரும,

வாச வழியெல்லாம் 

ரத்தமா கொட்டுச்சியா


திண்ணதேதோ சேறாம

பித்தக் கோளாறுன்னு

தட்டிக் கழிச்சு

நெட்டி முறிக்க


நாழி கழிஞ்சி

நாள் கழிஞ்சி

நாளொரு நாத்தச் சீல

பொழுதொரு புதுஎழவுண்டு 

மாசம் பல கழிய, 


கொத்துக் கொத்தா ரெத்தம்

செங்கருப்பா ரெத்தம் 

கோழி மேஞ்ச வெளியெல்லாம் 

கொடங்கொடமா ரத்தம் 


என்ன எழவோனு

பயந்துப் பதறி

ஆசுப்பத்திரி பக்கம்

வெவரம் கேக்க போனப்ப


ஏதேதோ கேட்டாக

ஏதேதோ சொன்னாக

ஏதொன்னும் புரியாம

புரிய சொல்ல சொன்னேன்


கொணப்படுத்த முடியாதாம்

மருந்தேதும் கெடயாதாம்

பச்செலையோ நொச்செலையோ

ஏதொண்டும் கெடையாதாம் 


சாவ போறேன்

செத்து நாரப் போறேன்

பட்டம் படிக்க மட்டும்

பாவி மக இருப்பேனா?

படிச்சு முடிக்க முன்ன

சுடுகாட்டில் கெடப்பேனோ?


நோயி வாயி பட்டேனு

மவராசேங்காது பட்டா

எழெவெடுத்தக் கழுதைக்கி

இது வேறக் கேடானு

எட்டி ஒதச்சா செவுறோட சரிஞ்சிருவேன்

அங்கேயே செத்துருவேன்


மாடத் தொறையே!

மருத வீர சாமியே!

இன்னுங்கொஞ்சகாலம்

இழுத்துட்டு கெடந்தாச்சும்

ஆச ரோசா ஒன்

பாசம் மொகம் பாக்க வேணும்

சீலைக்குள்ள உன்ன

இழுத்தணைச்சு மூட வேணும்

ராசதி ராசா

என்வவுத்து ரோசா

இன்னிக்கோ நாளைக்கோ

செத்து நாரும் போது

இத்தான் சங்கதின்னு

ஒங்கப்பேங் காது சொல்லு


சித்தி வருவா

செனங்கொண்டு அடிப்பா

அப்படி இலென்னா

மவராசி கெடைப்பா


எப்புடிப் போனாலும்

எதுவென்ன ஆனாலும்

சுத்தும் பூமியோட

சேந்து நீயுஞ்சுத்து


டாக்டருக்குப் படி

அம்மா நோயிக்கு

மருந்து கண்டுபுடி

நாளைக்கி யாராச்சும்

வருத்தோனு வந்தாக்க

கண்ணாட்டோங்கவனிச்சி

கருந்தி மருந்துகுடு


சீமையில பொண்ணு யெடு

தாய் பாசம் சொல்லிக் குடு

கண்ணீர் சிந்தாமத் தாங்கி

பொண்ணுக்கு நெஞ்சிக்குடு

தங்கமே!

மார்தவழ்ந்த செல்வமே!

கலங்காத

கண்ணீர் விட்டு தேம்பாத

ஆத்தா இருக்க மட்டும்

இறுக்கி அணச்சுக்குவேன்

வெறவோட வெந்தப் பின்னும்

நெஞ்சோட நாயிருப்பே


ராசாதி ராசா

என்வவுத்து ரோசா

சீனி வள்ளி சுட்டுருக்கு

தொட்டுக்க தொவயருக்கு

விருந்தா நெனச்சுக்கப்பு

இப்பதிக்கு கடிச்சுக்கப்பு….



- ஹஜன் அன்புநாதன்-

Comments

Post a Comment

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்