நான் எனும் என் தேவதை





அதிகம் பழகியும்
துளியும் பரிச்சயமற்ற அவள் முகம்;
அதீத வெளியெங்கும்
அதிகாரமாய் சிறகு விரிக்கும் அழகு;
ஆரத்தழுவி அமுதம் கொடுக்கும்
பேரிளம் முலைகள்;
நிர்வாணமே அழகாகிப்போன மேனி;
அதிகபட்ச அணியாய் 
அம்மணமே ஆடையாக்கிய சுதந்திரம்;
அவ்வப்போது குளிருக்கு 
என் ஆழ்மன அமைதியை
போர்த்தியுறங்கும் பேரமைதி


மல்லாத்து கண்மூடி
கை கோர்த்து தலை கட்டி
சீழ் படியும் நினைவுகளை
சீர்செய்ய துடிக்கும் போது
தொப்புளுக்கு கீழே
வலிக்காமல் கடிப்பவளும்,


அந்தகார வாழ்க்கையில் 
ஏகாந்த சுடர் கொண்டு
பொருள் தேடி நடக்கையிலே
அக்குள் அடிவெளியில்
அழகாய் கை விட்டு
தூக்கி அணைத்தெடுத்து
பவ்வியமாய் பறப்பவளும்,


சிதையான சதையோடு
பிணமாக நான் நாறி
புழுவைத்து பதனழிய,
இருதய இடுக்குகளில்
இழிவாக வழியுமந்த
நாத்தப் புண்ணீரை 
நாவால் நயக்க நக்கி 
தூய்மை செய்பவளும்,

கேட்கச் சகிக்காத
கூகை மொழிக்கஞ்சி
காது பொத்திக் கதறும் போது-
கைகளை அகற்றிவிட்டு
தொடையிடை கிடத்திக்கொண்டு
தலை மயிர் கோதி விட்டு
தாலாட்டு படிப்பவளும்,

அவளே தான்!
என் பிரத்தியேக தேவதை!

என் கடினங்களை
மென்மை செய்யும்
அலாதி பேரின்பம்!

அவள்..

பகிரங்க பொருளாக
மேல் கிடை உதட்டாலும்
அந்தரங்கமாகிப்போன
செங்குத்து இதழாலும் 
ஆரத்தழுவி
வாய்முத்தம் தருமிதத்தை
ஆயிரம் பூக்களின்
மென்னிதழ் கொண்டு
தடவித் தர முடியுமா?

சவுக்கடி தோள் கிழிக்க
மூலையிடை பேன் கடிக்க
மார்பிடை அணைத்தென்னை 
நெஞ்சு நீவி ஊதிவிட
தெளிக்குமவள் உமிழ் நீரை 
எந்தக் கடல் கடைந்து
எங்கிருந்து கொண்டுவர?

காணாமல் போன காதல்
காமப் பிரவாகம்
விரைக்கும் சதை
விழைச்சிப் பொருள்
வெள்ளைப் பாய்ச்சல்
இன்னோரன்ன 
இத்தியாதிகள்
இடம் பெறல் நிமித்தம்
அவளோடு புணர்ந்தே
புத்துயிர் பெறுகிறேன்!

நான்..
அவளை காதலிக்கின்றேன்
கை பிடித்து முத்தமிட்டு
கலியாணம் கொள்ள போகின்றேன்
கட்டியணைத்து
கட்டில் உடைத்து
கரு தரிக்க போகின்றேன்!

சிரிக்காதீர்!

வயிறு முற்றி
குடம் உடைந்து
இடுப்பெழும்பு விலகி
கத்திக் கூச்சலிட்டு
நாளை நான் கவிதை பிரசவிக்கும் போது

உவந்து வந்து
நெற்றி முத்தமிடுவாள் அவள்!


- அன்புநாதன் ஹஜன்-

Comments

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்