கண்மணி மென்விரல் மீண்டும் பிடிக்கக் காலம் இனி இல்லையென்று கண்ணீர் தேற்றி காலாறும் நேரமிது நித்திய கல்யாணி மீது தொத்திக் கொண்டாடும் மழைத் திவலையின் சலனம் இதயத்துடிப்பை இரட்டிப்பாக்கும் போது என்னருகில் நீ இல்லை. ஞான மேடையில் அமர்ந்து விழி மூடி நீ ஆதியந்தம் தேடயிலே பாதங்களில் வந்து விழும் அத்தனை போதி மர இலைகளிலும் நான் விட்ட கண்ணீரின் கரிப்புத் தன்மை படிந்திருக்கும்! கௌத்தமா பூனைப்பாதம் பொருத்தி நீ எனை நீங்கி ஒடையிலே சயனத்திலோ, குழந்தை வெளித்தள்ள யோனி கிழித்த வலியினிலோ புரண்டு படுத்திருந்தேனெனவா எண்ணினாய்? இதயம் கிழிந்த வலியோடும் சதா காலத்திற்கும் தொலையப்போகும் சாசுவத சயணத்தொடும் அக்கப்போரடித்தவண்ணம் பாதச்சந்தம் கேட்க விழித்துக் கொண்டிருந்தேன் எனக்கும் உனக்கும் ஆறுதல் தேடி அழுது கொண்டிருந்தேன்! விம்மிப்பொறுகி ஓலமிட்டால் திரும்பி விடும் – உன் தணிந்த கழல் பாதமென்ற நப்பாசையும் ஏகாந்தம் மீது நீ பூண்ட உறவுக்கிடையில் சக்களத்தியெனக் குறுக்கிடத் தவிக்கும் காதலெனும் தப்பாசையும் ஒன்றிணைய, உயிரையும் உடலையும் வேறுபடுத்திக் கிழித்து உச்சஸ்தாயி மௌனத்தில் கத்திக் கொண்டிருந்தேன்! விடியலுக்கு முன்னே...